
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதன் ஒருபகுதியாக இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக ஜேமி ஓவர்டனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இம்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதானமாக தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய செதிகுல்லா அடல் 4 ரன்னிலும், ரஹ்மத் ஷா 4 ரன்னிலும் என ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.