
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் ஆபாரமான சதத்தை பதிவுசெய்ய, முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் 177 ரன்களையும், ஒமர்ஸாய் 41 ரன்களையும், நபி 40 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஜோஃப்ரா ஆர்ச்சர், இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை ஜோஃப்ரா ஆர்ச்சர் முறியடித்துள்ளார்.