
இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கு பென் ஸ்டோக்ஸ் எந்த அளவிற்கு காரணமோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். தனது வேகத்தைக் கொண்டு சர்வதேச வீரர்களுக்கு சவால் அளித்து வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்தார்.
கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியில் இருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் கடந்த மே மாதம் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இதனால் டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான தொடர்களில் ஜோஃப்ரா ஆர்ச்சர் பங்கேற்கவில்லை. கடந்த 19 மாதங்களில் மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்துகொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர், இப்போது மீண்டும் களமிறங்கியுள்ளார். இங்கிலாந்து - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் களமிறங்கிய ஆர்ச்சர், முதல் ஓவரிலேயே ஜாக் கிராலேவின் ஹெல்மட்டை பதம் பார்த்தார். இதனால் இன்னும் சில மாதங்களில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.