
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷயர் அணியில் டோபி ஆல்பர்ட் மற்றும் லுக் கார்ட்ரைட் ஆகியோரது அரைசதங்கள் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டோபி ஆல்பர்ட் 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 84 ரன்களையும், கார்ட்ரைட் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்தனர். ஹாம்ஷயர் தரப்பில் மெக்கன்ஸி ஜோன்ஸ், சிமோன் ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய எசெக்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோர்டன் காக்ஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 பவுண்டரி, 11 சிக்ஸர்கள் என 139 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் எசெக்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹாம்ஷயர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.