
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 6 பவுண்டரிகல், 4 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்காற்றினார். அதேசமயம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட லியாம் டௌசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசமின் சாதனை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி 570 ரன்களையும், பாபர் ஆசம் 540 ரன்களையும் சேர்த்து 4 மற்றும் 5ஆம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோஸ் பட்லர் 611 ரன்களைச் சேர்த்து 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 693 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.