
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று முந்தினம் நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
அதேசமயம் இத்தொடரில் அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணி லீக் சுற்றுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என அடுத்தடுத்து ஐசிசி தொடர்களில் படு தோல்விகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் தொடர் தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்துள்ளார்.