
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணியானது தினேஷ் சண்டிமாலின் அபாரமான சதத்தின் மூலம், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மென்டிஸ் 51 ரன்களுடனும் தொடங்கினர். இதில் மேத்யூஸ் 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய் கேப்டன் தனஞ்செய டி சில்வாவும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கமிந்து மெண்டிஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்ய, அவருக்கு துணையாக விளையாடிய குசால் மெண்டிஸும் தனது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.