
இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்கிற்கு பின் முச்சதம் விளாசிய ஒரே வீரர் கருண் நாயர் தான். சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் கருண் நாயர்ன் ஆட்டம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 381 பந்துகளில் 32 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 303 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.
அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபார்மின்றி இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்திய அணிக்காக வெறும் 6 டெஸ்ட் போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர், அதன்பின்னர் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கவே இல்லை.
அதேபோல் ஐபிஎல் தொடர்களிலும் கருண் நாயர் சோபிக்க தவற, அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்பட்டது. ஆனால் கருண் நாயர் தொடர்ச்சியாக ஃபார்முக்கு வர முயன்று வந்தார். அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாட கருண் நாயகருக்கு வாய்ப்பு கிடைத்தது.