
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் அபிஜீத் தோமர், மானவ் சுதர் ஆகியோர் தலா 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மஹிபால் லோம்ரோர் 32 ரன்களிலும், தீபக் ஹூடா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷுபம் கர்வால் - கார்திக் சர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களில் கார்வால் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் கார்த்திக் சர்மாவும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் தீபக் சஹார் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்தது. விதர்பா அணி தரப்பில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனைத்தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய விதர்பா துருவ் ஷோரே மற்றும் யாஷ் ரத்தோட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், யாஷ் ரத்தோட் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.