
இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். உலகின் தலைசிறந்த டி20 வீரர்களில் ஒருவராக இருந்து வரும், அவர் தற்போது ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாகவும் அங்கம் வகித்து வருகிறார். மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் பற்றி மிகப்பெரும் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் ஐபிஎல் 2025 தொடருக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சூர்யகுமார் யாதவை தங்கள் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான தகவலின் படி சூர்யாவுக்கு கேகேஆர் அணியானது அணியை வழிநடத்தும் முறைசாரா சலுகையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கொண்டு, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அணிக்கு கோப்பையை வாங்கிக்கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி நிர்வாகம் கழட்டிவிட முற்பட்டு வருவதுடன், சூர்யகுமார் யாதவிற்கு அந்த பொறுப்பை வழங்க முன் வந்துள்ளது. ஆனால் சூர்யகுமார் யாதவ் கேகேஆருக்கு திரும்ப விரும்புகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.