
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேஎல் ராகுலை விடுவித்தது.பின்னர் வீரர்கள் ஏலத்தின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுல் ஒப்பந்தம் செய்யபட்டார். இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்தன.
ஏனெனில் அவர் இதற்கு முன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் தான் ஒரு சாதாரண வீரராக மட்டுமே அணியில் விளையாடவுள்ளதாக கேஎல் ராகுல் தெரிவித்ததை அடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலும், துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.