
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 5 ரன்னிலும், ஆபிஷேக் போரல் 30 ரன்களிலும், அக்ஸர் படேல் 25 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேஏல் ராகுல் ஐபிஎல் தொடரில் தன்னுடைய 5ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 சிக்ஸர்களுடன் 21 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.