
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் மூலம, ஷிவம் தூபேவின் அதிரடியான அரைசதத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும், ஷிவம் தூபே 66 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குயின்டன் டி காக், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்ததுடன் 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் லக்னோ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், “இதுபோன்ற போட்டியில் வெற்றிபெறுவது எப்போது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடி எங்களை அழுத்ததிற்கு உள்ளாக்கினர். அவர்கள் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் விக்கெட்டை இழந்ததும் அதிலிருந்து மீண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது.