
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் மூன்று தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகினார். அதன்பின் காயத்திலிருந்து மீளாத கேஎல் ராகுல் இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார். இதனையடுத்து அவர் மேற்சிகிச்சைகாக லண்டன் சென்று சிகிச்சைப் பெற்றார்.
அதன்பின் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய கேஎல் ராகுல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட அகாடமியில் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். இதன் காரணமாக அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஏனெனில் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் கேஎல் ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார்.