
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் தங்களுடைய முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேற்கொண்டு இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. அதன்படி அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் கேஎல் ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸில் இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை தவறவிட்ட ராகுல் தற்சமயம் மீண்டும் அணியில் இணைந்துள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.