
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா அதற்கடுத்த போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை சுவைத்து 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்று தன்னை நம்பர் ஒன் டி20 அணி என்பதை நிரூபித்தது. கடந்த ஒரு வருடமாக இதேபோல் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்ற இந்தியா தொடர் வெற்றிகளை பெற்று நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய போதிலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியடைந்து பின்னடைவையும் விமர்சனங்களையும் சந்தித்தது.
அதனால் அந்த தொடரில் சுமாராக செயல்பட்ட வீரர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இத்தொடரில் இந்தியா வென்றாலும் புவனேஸ்வர் குமார் போன்ற சில முக்கிய வீரர்கள் இன்னும் முன்னேறாமல் இருப்பது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக அற்புதமாக செயல்பட்டு ரோஹித் சர்மாவுடன் நிரந்தரமாக களமிறங்கும் தொடக்க வீரராக அறியப்படும் கேஎல் ராகுல் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய ஜிம்பாப்வே தொடரில் 1, 30 என சொற்ப ரன்களில் அவுட்டானார்.
அதைவிட ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டான அவர் கத்துக்குட்டி ஹாங்காங்க்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதனால் அணியிலிருந்து நீக்குமாறு நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கையும் விமர்சனங்களையும் முன்வைத்ததால் இந்த ஆஸ்திரேலிய தொடரில் அழுத்தத்துடன் விளையாடிய அவர் முதல் போட்டியில் 55 ரன்கள் எடுத்தாலும் இந்தியா தோற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் 10 ரன்களில் ஆட்டமிழந்த அவர் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது போட்டியில் மீண்டும் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.