
இம்மாத இறுதியில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், ஜோ ரூட் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் காத்திருக்கிறனர்.
அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த முகமது ஷமி இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக காயத்தினால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த ஷமி தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.