
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 420 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஜேக் எட்வர்ட்ஸ் 88 ரன்களையும், டாட் மர்பி 76 ரன்களையும், நாதன் மெக்ஸ்வினீ 74 ரன்களையும் சேர்த்தனர். இந்தியா தரப்பில் மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதில் ஷாய் சுதர்ஷன் 75 ரன்களையும், ஜெகதீசன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இந்திய ஏனி 194 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாதன் மெக்ஸ்வீனி 85 ரன்களையும், ஜோஷ் பிலிப் 50 ரன்களையும் எடுத்ததை தவிர மற்ற வீரர்கள் பெரிய ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 185 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய வீரர்கள் குர்னூர் பிரார், மனவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.