
இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக தோற்காமல் இருந்து வரும் மாபெரும் கௌரவத்தை தக்க வைத்துக் கொண்ட அந்த அணி ஒய்ட் வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு வெற்றியை கோட்டை விட்டது. ஏனெனில் அதன் பின் இந்தியாவை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்திய அந்த அணி 2ஆவது இன்னிங்சில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 79 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதை எளிதாக சேஸிங் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தென் ஆப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து 1 – 1 என்ற கணக்கில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது. முன்னதாக இத்தொடரில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டீன் எல்கர் முதல் போட்டியில் 185 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார்.