
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமும் இந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனால் இந்த ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் மற்றும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் அணிகள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியீடுவதற்கு நேற்றைய தினமே (அக்டோபர் 31) கடைசி நாள் என்ற கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 6 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி கேகேஆர் அணி ரிங்கு சிங்கை 13 கோடிக்கும், வருண் சக்ரவர்த்தியை 12 கோடிக்கும், ஹர்ஷித் ரானா மற்றும் ரமந்தீப் சிங் ஆகியோரை தலா ரூ.4 கோடிக்கும் தக்கவைத்துள்ள நிலையில், நட்சத்திர ஆல் ரவுண்டர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரை தலா ரூ.12 கோடிக்கு தக்கவைத்துள்ளது. இருப்பினும் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.