தோனியிடம் சில ஆலோசனைகளை கேட்டறிந்தேன் - கேஎஸ் பரத்!
இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதுவதற்கு தயாராகி வருகின்றன. இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த இந்தியா போராட உள்ளது. மேலும் இப்போட்டியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்துக்கு பதிலாக விளையாடப் போவது யார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.
குறிப்பாக இஷான் கிஷன் மற்றும் கேஎஸ் பரத் ஆகியோரில் யார் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இருவருமே இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவமில்லாத காரணத்தால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்ற குழப்பம் இந்திய அணி நிர்வாகத்திடமும் காணப்படுகிறது. அதில் ரிஷப் பந்த் போல இடது கை பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடும் திறமையை கொண்ட இஷான் கிஷன் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதால் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்று சிலர் ஆதரவு கொடுக்கின்றனர்.
Trending
ஆனால் இந்திய மண்ணிலேயே பேட்டிங் செய்வதற்கு தடுமாறும் அவர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் அதுவும் அறிமுக போட்டியில் நேரடியாக களமிறங்கி அசத்துவதற்கு வாய்ப்பில்லை என்பதால் எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. மறுபுறம் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அறிமுகமான பரத் பேட்டிங்கில் பெரிய அளவில் அசத்தவில்லை என்றாலும் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் மெதுவாக விளையாடும் ஸ்டைலை கொண்டிருந்தாலும் இதற்கு முன் இந்தியா ஏ அணிக்காக வெளிநாடுகளில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கான ஆலோசனைகளை முன்னாள் ஜாம்பவான் வீரர் எம்எஸ் தோனியிடம் சமீபத்திய ஐபிஎல் தொடரில் கேட்டு தெரிந்து கொண்டதாக கேஎஸ் பரத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இதற்கு முன் சதமடிக்கவில்லை என்றாலும் சில தோற்க வேண்டிய போட்டிகளில் 90+ ரன்களை அடித்து இந்தியா ட்ரா செய்வதற்கு உதவிய அனுபவத்தை கொண்ட தோனி எந்தளவுக்கு விக்கெட் கீப்பிங் செய்வார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இதுகுறித்து பேசிய பரத், “சமீபத்திய ஐபிஎல் தொடரின் போது நான் தோனியிடம் பேசினேன். அப்போது இங்கிலாந்து மண்ணில் கீப்பிங் செய்த தம்முடைய அனுபவங்களை பகிர்ந்த அவர் அனைத்து விக்கெட் கீப்பர்களுக்கும் எது சிறப்பாக வேலை செய்யும் என்பதை தெரிவித்தார். அந்த நல்ல பேச்சு வார்த்தையில் விக்கெட் கீப்பிங் பற்றிய நிறைய நுணுக்கங்கள் இருந்தது. பொதுவாக விக்கெட் கீப்பிங் என்பதே விழிப்புணர்வுடன் இருப்பதாகும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எம்எஸ் தோனி ஆவார். கீப்பிங் செய்யும் போது அவருடைய விழிப்புணர்வு மிகவும் அபாரமாக இருக்கும்.
“பொதுவாக விக்கெட் கீப்பராக இருப்பதற்கு நீங்கள் பெரிய ஆர்வத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அது பெரும்பாலும் பாராட்டுகளை பெறாத வேலையாகும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ஓவர்கள் முழுவதுமாக நின்று ஒவ்வொரு பந்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எனவே அந்த மிகப்பெரிய சவாலை நீங்கள் ஏற்றுக்கொண்டு அணியின் வெற்றியில் பங்காற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now