
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா முதல் ஓவரிலேயே பும்ரா வேகத்தில் டக் அவுட்டானார். அதை விட நிசாங்கா 2, சமரவிக்ரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4, கேப்டன் சனாக்கா 0 என 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றினார்.
அவருடைய வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத இலங்கை 15.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 50 ரன்கள் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விகெட்டுகலை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 51 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிஷன் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும், ஷுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து 6.1 ஓவரிலேயே இலக்கை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒரு ஓவர் வீசிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இந்த போட்டியில் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்த ஆசிய கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.