
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு நேற்று ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தியத் தேர்வுக்குழு அறிவித்த இந்த அணியில் ஆச்சரியப்படத்தக்க முடிவாக இஷான் கிஷான் நீக்கப்பட்டு, அவருடைய இடத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் 22 வயதான துருவ் ஜுரல் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றார். ஆனால் வீரர்கள் இருந்த காரணத்தினால் விளையாடுவதற்கு இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் காரணமாக இவருக்கு அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, இவர் அடுத்து மெயின் பிளேயிங் லெவனில் இடம் பெறும் வீரராக மாறினார்.
தற்பொழுது உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தரபிரதேச அணிக்காகவும், மேலும் இந்திய ஏ அணிக்காகவும் விளையாடி வருகிறார். உள்நாட்டு முதல் தர போட்டிகளில் 46 ரன் சராசரி வைத்திருக்கும் இவருக்கு, தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.