
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அந்த வகையில் இன்று இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளயாடிவ் வரும் இலங்கை அணியானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி அதிரடியாக விளையாடி வருகிறது.
அதிலும் குறிப்பாக இலங்கை அணி 5 ரன்களுக்கு எல்லாம் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறிய வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய குசால் மெண்டிஸ் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார் என்றே கூறலாம். ஏனெனில் இன்றைய போட்டியில் 77 பந்துகளை சந்தித்த அவர் 14 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.