
ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ரிஷப் பந்த் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதேசமயம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இந்த நிலையில் இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் விளையாடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல்லும் இந்திய தொடரில் இடம் பிடிக்க வில்லை. இதன் காரணமாக மேத்யூ ரென்ஷா மற்றும் மிட்செல் ஓவன் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.