IND vs AUS: ஆஸ்திரேலிய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கிய ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லியில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் நாளை டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் குறித்தும், அணி மாற்றங்கள் குறித்தும் பெரிதான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் வெளியேறி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் உள்ளே வர வாய்ப்புள்ளது. ஆனால் யாரை வெளியேற்றுவார்கள் என்பது கொஞ்சம் குழப்பமே.
Trending
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணியின் அணுகுமுறை பற்றி பேசும் பொழுது, “ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லியில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்தவித சவாலையும் தராமல் முதல் போட்டியில் அடங்கியதைப் பார்க்க எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டார்கள். ஆஸ்திரேலியா இறங்கி சண்டை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடரை முழுமையாக இழக்கும் ஆபத்து உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுடைய இந்திய ஐபிஎல் நண்பர்களை இப்பொழுது விட்டுவிட்டு தங்களுடைய ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி, பின்பு தங்கள் நட்பை தொடரலாம் என்று நான் கூறுகிறேன். ஆஸ்திரேலியா வீரர்கள் கண்ணாடிக்கு முன் நின்று நான் மோசமானவர்கள் இல்லை என்று கூறிக் கொள்ள வேண்டும்.
இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் இல்லை அச்சுறுத்த வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணி தனது ஏ பிளஸ் ஆட்டத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அதாவது நாங்கள் ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்திய ஆட்டத்தைப் போல. இது ஒன்றும் முடியாதது கிடையாது. நாங்கள் அடிலெய்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, அங்கிருந்து கடுமையாக சண்டை செய்து நாங்கள் தொடரை வென்றோம். எனவே ஆஸ்திரேலியா தொடரை இங்கு வெல்வது என்பது சாத்தியமற்றது கிடையாது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now