
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் குஜராத் கிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு வேன் வைக் - கேப்டன் ஷிகர் தவான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன் வைக் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிண்டல் சிம்மன்ஸ் 8 ரன்களுக்கும், முகமது கைஃப் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதற்கிடையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் 38 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் கிரேட்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி தரப்பில் சுபோத் பாட்டி 2 விக்கெட்டுகளையும், ஹமித், ரஸாக், பவன் நெகி மற்றும் ஜெசல் கரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர்.