எல்பிஎல் 2022: மீண்டும் கோப்பையை தட்டிச்சென்றது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை வென்றது.
நடப்பாண்டு லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ்-கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் நிஷன் மதுசங்கா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்டிமல் 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Trending
அவரைத் தொடர்ந்து 31 ரன்களில் அசலங்காவும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ரவி போபாரா இறுதிவரை களத்தில் இருந்து 47 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜாஃப்னா அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ அரை சதமடித்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார். மேலும் சதீரா சமரவிக்ரமா 44 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஜாஃப்னா அணி 19.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி எல்பிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கும், தொடர் நாயகன் விருது சதீரா சமரவிக்ரமாவுக்கும் வழங்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now