
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக்(Lanka Premier League) தொடரின் 5ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஏஞ்சலோ பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் குர்பாஸ் 20 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஏஞ்சலோ பெரேராவும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய சமரவிக்ரமா, துனித் வெல்லலாகே, கேப்டன் திசாரா பெரேரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்துடன், 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 70 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஷதாப் கான் 23 ரன்களையும், கருணரத்னே 13 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.