
ஐந்தாவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் - கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணியில் தினேஷ் சண்டிமல் ஒரு ரன்னிலும், முகமது ஹாரில் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் அணியின் தொடக்க வீரர் ஆண்ட்ரே ஃபிளெட்சர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் 10 ரன்களிலும், பவன் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, அரைசதம் கடந்த ஆண்ட்ரே ஃபிளெட்சரும் 50 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸுடன் இணைந்த கேப்டன் வநிந்து ஹசரங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் மேத்யூஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வநிந்து ஹசரங்கா அரைசதம் கடந்ததுடன் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. மார்வெல்ஸ் அணி தரப்பில் இசுரு உதானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கலே மார்வெல்ஸ் அணியில் கேப்டன் நிரோஷன் டிக்வெல்ல 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்த டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.