
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் வெள்ளிக்கிழமை சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு சீசன்களில் மட்டுமே விளையாடி இருந்தாலும் இருமுறையும் குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இரண்டு முறையும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்திலேயே வெளியேறியது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
அதன்படி அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் அணி வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் லக்னோ அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் தீபக் ஹூடாவிற்கு ஜஸ்டின் லங்கர் பேட்டிங் பயிற்சியை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.