டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துவிட்டது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இறுதி அணியை சமர்பிக்க வேண்டும் என்பதால், அணித்தேர்வுக்கான பணிகள் சூடுபிடித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள். இவர்களின் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரும் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார். இந்திய டி20 அணியில் 4வது இடத்திற்கு பொருத்தமாக இருப்பதால் இவரை டிராவிட் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மிகப்பெரிய பலவீனம் இருப்பதாக முன்னாள் வீரர் மதன் லால் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரருக்கு பலவீனம் இருந்தால், எதிரணி நிச்சயம் அதையே தான் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். அந்தவகையில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பால்களை சந்திப்பது ஒரு பலவீனமாக உள்ளது.