அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேட் கார்மைக்கேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். இதில் 60 ரன்களைச் சேர்த்த நிலையில் பால் ஸ்டிர்லிங் தனது விக்கெட்டை இழக்க, 59 ரன்களில் கேட் கார்மைக்கேலும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய காம்பெர் 44 ரன்களிலும், லோர்கன் டக்கர் 41 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் ஜோர்டன் நெய்ல் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அயர்லாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பேரி மெக்கர்த்தி 21 ரன்களுடன் தொடர்ந்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், பேர் மெக்கர்த்தியும் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.