
சர்வதேச அரங்கில் வருங்கால நட்சத்திரங்களை கண்டறிந்து கொடுக்கும் நோக்கத்தில் கடந்த 2008இல் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் தரமான வீரர்களை அடையாளப்படுத்தி வருகிறது. இருப்பினும் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ள ஐபிஎல், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகராக தரத்தை கொண்டிருப்பதுடன் கோடிக்கணக்கான ரூபாய்களை பணமாக கொட்டுகிறது.
அதனால் ஐசிசியை மிஞ்சி பணக்கார வாரியமாக உருவெடுத்துள்ள பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த வருடம் 10 அணிகளுடன் 74 போட்டிகளாக விரிவு படுத்தப்பட்ட ஐபிஎல் வரும் காலங்களில் 84, 94 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. இதனால் சர்வதேச போட்டியின் எண்ணிக்கையும் தரமும் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது பல வல்லுனர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதை விட 90களில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற வெறியுடன் வளர்ந்த வீரர்கள் தங்களது தேசிய அணிக்காக வருடம் முழுவதும் விளையாடினாலும் ஒரு கோடியை சம்பளமாக பார்க்க மாட்டார்கள்.
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதமும் விளையாடுவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீரர்கள் தாய்நாட்டைப் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். மேலும் ஐபிஎல் போலவே அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் இன்று மேலும் பணக்காரர்களாக அவதரித்து தென் ஆப்பிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தங்களுடைய கிளை அணைகளை வாங்கியுள்ளனர்.