சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்த ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்று அறிவித்துள்ளார்.
![Marcus Stoinis Announces Surprise Retirement From ODIs With Immediate Effect சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஸ்டோய்னிஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி!](https://img.cricketnmore.com/uploads/2025/02/marcus-stoinis-ruled-out-from-nz-t20i-series-aaron-hardie-named-replacement-lg-mdl.jpg)
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும், எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. முன்னதாக இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஆல் ரவுண்டராக இடம்பிடித்திருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
Trending
இதன்மூலம் அவர் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் விளையாடபோவதில்லை என்பதையும் உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அற்புதமான பயணமாக இருந்து வருகிறது, மேலும் நான் எனது அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் எப்போதும் போற்றும் ஒன்று.
இது எளிதான முடிவு அல்ல, ஆனால் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். மேலும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உடன் ஒரு அருமையான உறவு உள்ளது, மேலும் அவர் எனக்கு அளித்த ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இதுவரை 71 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் 6 அரைசதங்களுடன் 1495 ரன்களையும், பந்துவீச்சில் 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் ஸ்டோய்னிஸ் பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Marcus Stoinis retires from ODI cricket with immediate effect! #ChampionsTrophy2025 #Australia pic.twitter.com/ktFipFDcw1
— CRICKETNMORE (@cricketnmore) February 6, 2025
ஏற்கெனவே எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் விலகிய நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் இத்தொடருக்கு முன்னரே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ்(ஓய்வு), ஆடம் ஸாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now