
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்க உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 5 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தையும், ஜான்சன் சார்லஸ் 5 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும் இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.