
இன்று தொடங்கிய ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், கடந்த முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசிலாந்தும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடி வருகிறார்கள். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 282 ரன்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து மடக்கி இருக்கிறது. அதே சமயத்தில் முதல் 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தையும் பெற்றிருக்கிறது.
இந்த போட்டிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. எனவே நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிக்குதான் மைதானம் முழுமையாக நிரம்பும் என்கின்ற நிலை இருக்க, இந்தியா விளையாடும் போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ஆன் தேதி விளையாட இருக்கிறது. தற்போது இரு அணி வீரர்களும் சென்னையில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் வேகப்பந்துவீச்சுக்கு மூன்று ஆல் ரவுண்டர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு ஒரு ஆல் ரவுண்டர் என மொத்தம் நான்கு ஆல் ரவுண்டர்கள் விளையாடும் அணியிலேயே இடம் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள். அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் இரண்டு பயிற்சி போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.