
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னில் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர், ஷமியின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள், ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அஸ்வின் பந்துவீச்சில் 36 ரன்களில் வெளியேறினார்.