ENG vs WI: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வை அறிவித்ததையடுத்து, இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பாயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இப்போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங் 70 ரன்களை விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். முன்னதாக இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
Trending
இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இத்தொடரின் எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியின் ஆலோசகராக ஜேம்ஸ் ஆண்டர்சன் செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேற்கொண்டு, இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் மாற்று வீரராக மார்க் வுட்டிற்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனிலும் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 18ஆம் தேதி நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now