
இந்திய மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா 3ஆவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும், தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளது.
முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினை சாய்ப்பதற்காக மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப்பிடித்து ஆஸ்திரேலிய அணியினர் தீவிர வலைப்பயிற்சிசில் ஈடுபட்டதை மறக்க முடியாது. ஆனால் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிய அஸ்வின் இதுவரை வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2ஆவது போட்டியில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையுமே ஒரே ஓவரில் அவுட்டாக்கிய அவர் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்தார் அஸ்வின்.
இருப்பினும் 3வது போட்டியில் வெற்றி கைநழுவி சென்ற போது களத்தில் இருந்த லபுசாக்னே எப்படியாவது அவுட் செய்ய வேண்டும் என்று நினைத்த அஸ்வின் தன்னுடைய ஓட்டத்தில் ஒரு சில நடைகளை குறைத்து பந்து வீச முடிவெடுத்தார். ஆனால் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த விடக்கூடாது என்று நினைத்த மார்னஸ் லபுஸ்ஷேன் பேட்டிங் செய்யும் இடத்திலிருந்து வேண்டுமென்றே விலகிச் சென்று வாயில் சுமிங்கமை மென்று நேரத்தை தாமதப்படுத்தினார்.