
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீசுவாரா என்ற கேள்விகள் அதிகரித்துவருகின்றன. ஏனெனில் முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே விலகியதுடன் மேற்சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார்.
அதன்பின் ஆஸ்திரேலிய அணி மருத்துவர்களுடன் இணைந்து தனது உடற்தகுதியை மேம்படுத்தியதுடன், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்றிருந்தார். ஆனாலும் அவர் பேட்டிங்கில் மட்டுமே தனது பங்களிப்பை வழங்கி வந்த நிலையில், பந்துவீசுவதை முழுமையாக தவிர்த்தார். இதன் காரணமாக அவர் இந்த தொடரிலாவது பந்துவீசுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.