
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுபாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இன்று நடைபெற்றுவரும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
தரம்சாலாவில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஜிங்கியா ரஹானே 9 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 32 ரன்களிலும், ஷிவம் தூபே ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்துள்ளனர்.
இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி இணை விளையாடிவருகிறது. இப்போட்டியின் 8 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியானது 3 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான சிஎஸ்கே அணியில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக மிட்செல் சாண்ட்னருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.