
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டராக அறியப்பட்டவர் மேத்யூ வேட். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. மேலும் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணிகளில் பல்வேறு நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையிலும், மேத்யூ வேடிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என கூறப்பட்டது. இதையடுத்து தான் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்துள்ள மேத்யூ வேட், ஆஸ்திரேலிய அணியின் ஃபில்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முதல் மேத்யூ வேட் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு அணியின் பயிற்சியாளர் குழுவில் மேத்யூ வேட் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.