
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த போது, இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 123 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவீஸ் ஹெட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், ஹார்டி 16, இங்லீஸ் 10, டிம் டேவிட், மற்றும் ஸ்டோய்னிஸ் 17 ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – மேத்யூ வேட் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. கடைசி ஒரு ஓவருக்கு 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையையும் அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி கடைசி பந்து வரை பயமே இல்லாத பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்று கொடுத்தது. மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், மேத்யூ வேட் 16 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர்.