
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் முன்னேறின. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கியா மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஹீலி மேத்யூஸ் - கர்ட்னி வெப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் கர்ட்னி வெப் 9 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சோஃபி மோலினக்ஸ் 6 ரன்களிலும், டியண்டிரா டோட்டின் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் மெல்போர்ன் அணி 23 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஹீலி மேத்யூஸுடன் இணைந்த ஜார்ஜிய வெர்ரம் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹீலி மேத்யூஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜார்ஜியா வெர்ரம் 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நவோமி ஸ்டாலன்பெர்க் தனது பங்கிற்கு 16 ரன்களைச் சேர்த்து நடையைக் கட்ட, அடுத்து வந்த நிக்கோல் ஃபல்டும் 2 ரன்னிலும், ஜார்ஜிய ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.