
இந்தியாவில் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். முதல் நான்கு போட்டிகளில் அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் ஆல் - ரவுண்டர் பாண்டியா. அவருக்கு பேட்டிங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தார். அவர் தனது முதல் ஓவரை வீச வந்த போது இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியிலிருந்து விலகி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டார். பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்றும், அவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெற மாட்டார் என்றும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், கடைசியாக நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இடம் பெறவில்லை. பாண்டியா இல்லாத நிலையில், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், பவுலிங்கில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். முகமது ஷமி விளையாடிய 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.