
உலகக்கோப்பை தொடரின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஷுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி வெறும் 19.4 ஓவர்களில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜாகீர் கான் மற்றும் ஜவஹல் ஸ்ரீநாத் இருவரும் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி 45 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.