
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
இதனால் உலகக்கோப்பை வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட தொடரில் 5 தோல்விகளை பதிவு செய்த முதல் நடப்பு சாம்பியன் என்ற மோசமான உலக சாதனையும் இங்கிலாந்து படைத்துள்ளது. இதனால் கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள், டி20 உட்பட ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியான வேகத்தில் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இதுவரை 113 போட்டிகளில் 145 விக்கெட்களை எடுத்துள்ளார்.