ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்த மைக்கேள் கிளார்க்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை முன்னாள் கேப்டன் கிளார்க் விவரித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி 3ஆவது நாளுக்குள் சுருண்டு படுதோல்வி அடைந்தது. டெல்லியில் நடந்த 2ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் 6 பேர் முட்டிப்போட்டு பந்தை அடிக்க (ஸ்வீப் ஷாட்) முயற்சித்து ஆட்டமிழந்தது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பட்டியலிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணியின் தடுமாற்றம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா விளையாடவில்லை. இது தான் மிகமிகப் பெரிய தவறு.
Trending
இங்குள்ள சூழலில் பழக்கப்படுத்திக் கொள்ள குறைந்தது ஒரு பயிற்சி ஆட்டத்திலாவது (ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்த முறை பயிற்சி ஆட்டம் வேண்டாம் என்று கூறி விட்டது) விளையாடி இருக்க வேண்டும். 2ஆவது டெஸ்டில் வீரர்களின் ஷாட்டுகள் சரியில்லை. நீங்கள் உங்களது இன்னிங்சை தொடங்கும் போது, பந்தை 'ஸ்வீப் ஷாட்' வகையில் அடிப்பதற்கு உகந்த சூழலாக இருக்காது. இதே போல் களம் இறங்கிய உடனே சுழற்பந்து வீச்சில் ஒரு போதும் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட்டுகள் அடிக்கக்கூடாது.
நம்மிடம் எத்தனை உதவியாளர்கள், பயிற்சியாளர்கள் உடன் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறீர்கள். ஒரு பேட்ஸ்மேனாக உயரிய லெவலில் ஆடும் போது, எந்த மாதிரி ரிஸ்க் எடுத்து ஆடினால் பலன் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ப விளையாட வேண்டும்.
இது போன்ற ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது, பந்தை நேர்பகுதியில் அடித்து விரட்ட வேண்டும். நான் ஒவ்வொரு சுழற்பந்தையும் நேராகத் தான் அடிப்பேன். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்து ஆஸ்திரேலியர்கள் கற்று இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் இந்தியர்களின் பேட்டிங்கை பார்த்தது மாதிரியே தெரியவில்லை. உள்ளூர் சூழலை நன்கு அறிந்த இந்திய பேட்ஸ்மேன்கள் இப்படி தான் விளையாடுகிறார்கள். அவர்களை போன்று நாமும் விளையாடுவோம் என்று ஆஸ்திரேலியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை.
டெல்லி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் 2-வது இன்னிங்சில் வெறும் 113 ரன்னில் ஆல்-அவுட் ஆகி விட்டார்கள். அணியின் வியூகத்தில் என்ன தவறு நடந்தது என்பது எனக்கு உறுதியாக தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now