
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 3 சதம் அடித்தார். ஆனால் இம்முறை ஸ்மித் சிறப்பாக விளையாடினாலும் பெரிய ஸ்கோரைரை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
இது குறித்து அறிவுரை வழங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி, “ரோஹித் சர்மாவை பார்த்து எப்படி விளையாட வேண்டும் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் பந்தை எப்படி எதிர்கொண்டு ரன்களை சேர்க்கிறார் என்பதை கவனியுங்கள். சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள ரோஹித் சர்மா எவ்வாறு செயல்படுகிறார். பந்தை எப்படி அடிக்கிறார் என்பதை பாருங்கள்.
இந்திய வீரர்கள் இதே ஆடுகளத்தில் தான் வளர்ந்து இருக்கிறார்கள். இதனால் அதனை எப்படி எதிர்கொண்டு விளையாட வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் சொன்னதை கேட்டு விட்டு உடனே ரோஹித் சர்மாவை அப்படியே காப்பி அடித்து விளையாட வேண்டாம். ஏனென்றால் என்னால் மேத்தீவ் ஹைடன் போல் விளையாட முடியாது. எனவே ஒவ்வொரு சிறந்த வீரர்களும் எப்படி ரன் சேர்க்க முயற்சி செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்து பேட்ஸ்மேனுமே ஒவ்வொரு யுத்தியை பயன்படுத்தி ரன்கள் சேர்ப்பார்கள்.